துரை, திருச்சி நான்கு வழிச்சாலைகளுடன் நத்தம் சாலையை இணைக்கும் சுற்றுச்சாலை திட்ட பணி விரைவுப்படுத்தப்படுமா?; விவசாயிகள் எதிர்பார்ப்பு


துரை, திருச்சி நான்கு வழிச்சாலைகளுடன் நத்தம் சாலையை இணைக்கும் சுற்றுச்சாலை  திட்ட பணி விரைவுப்படுத்தப்படுமா?; விவசாயிகள் எதிர்பார்ப்பு
x

மதுரை, திருச்சி நான்கு வழிச்சாலைகளுடன் நத்தம் சாலையை இணைக்கும் சுற்றுச்சாலை திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

திண்டுக்கல்

மதுரை, திருச்சி நான்கு வழிச்சாலைகளுடன் நத்தம் சாலையை இணைக்கும் சுற்றுச்சாலை திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

சரக்கு போக்குவரத்து

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயத்துக்கு பெயர் பெற்ற பூமியாக நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி திகழ்கிறது. இங்கு தென்னை, கொய்யா, மா, புளியமரங்கள் அதிக அளவில் உள்ளன. காய்கறி சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சுற்று வட்டார கிராமங்களுக்கு, சிறந்த வியாபார தலமாகவும் நத்தம் விளங்குகிறது.

குறிப்பாக நத்தம் பகுதியில் விளைவிக்கப்படுகிற தேங்காய், மாங்காய்கள் லாரிகள் மூலம் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த சரக்கு போக்குவரத்து, நத்தம் பகுதியில் இருந்து திண்டுக்கல் வழியாகவே நடைபெற்று வருகிறது. ஆனால் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற சரக்கு போக்குவரத்துக்கு, ஈடு கொடுக்கும் வகையில் சாலைகள் இல்லை என்பது நீண்டகால குறைபாடாக இருந்து வருகிறது.

சுற்றுச்சாலை திட்டம்

வடமாநிலங்களுக்கு செல்லும் டாரஸ் லாரிகள், அப்பகுதியில் செயல்படுகிற நூற்பாலைகளுக்கு வருகிற லாரிகள் திண்டுக்கல் நகர் வழியாகவே வெளியேறும் நிலை உள்ளது. இதனால் திண்டுக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே திண்டுக்கல் நகருக்குள் வராமல் புறநகர் வழியாக சரக்கு வாகனங்கள் செல்லும் வகையில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதைக்கருத்தில் கொண்டு திண்டுக்கல்-நத்தம் சாலையில் சிறுமலை பிரிவு அருகே தொடங்கி மதுரை, திருச்சி நான்கு வழிச்சாலைகளுடன் இணைக்கும் வகையில் சுற்றுச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யும் பணியும் தொடங்கியது. அதன்பிறகு இந்த திட்டம் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

இந்தநிலையில் சுற்றுச்சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நத்தம், கோபால்பட்டி பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே அந்த திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். இதுகுறித்து நத்தம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-

ஹரிஹரன் (மாங்காய் கமிசன் மண்டி உரிமையாளர், வேம்பார்பட்டி):

வருடத்துக்கு 4 மாதங்கள் நடைபெறும் மாங்காய் சீசனில் தினமும் சராசரியாக நத்தம், கோபால்பட்டி பகுதிளில் இருந்து 200 லாரிகளில் வடமாநிலங்களுக்கு மாங்காய்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த லாரிகள் திண்டுக்கல், கரூர், சேலம் வழியாக செல்கின்றன. இதேபோல் காஷ்மீர், மகாராஷ்டிராவில் இருந்து ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களும் திண்டுக்கல் நகர் வழியாகவே லாரிகளில் வருகின்றன. திண்டுக்கல் நகரை லாரிகள் கடந்து வருவதால் அதிக நேரம் விரயம் ஆகிறது. இதனை தவிர்க்க திருச்சி, கரூர், மதுரை நான்கு வழிச்சாலைகளோடு நத்தம் சாலையை இணைக்க சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

நெரிசலில் சிக்கும் வாகனங்கள்

தாஸ் (கொய்யா வியாபாரி, கன்னியாபுரம்):

நத்தம், கோபால்பட்டி, கொசவபட்டி, அஞ்சுகுளிபட்டி, தவசிமடை பகுதிகளில் இருந்து மாங்காய், கொய்யா, சப்போட்டா ஆகியவற்றை கொள்முதல் செய்யும் சிறுவியாபாரிகள் அவற்றை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு ஆட்டோ, வேன்களில் கொண்டு செல்கின்றனர். இந்த சுற்றுச்சாலை அமைந்தால் திண்டுக்கல் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்காமல் பழனிசாலையை எளிதில் சென்றடையும். எரிபொருள் செலவு மட்டுமின்றி நேரமும் மிச்சமாகும். சிறுவியாபாரிகளின் லாபம் அதிகரிக்கும்.

பழனியப்பன் (தேங்காய் குடோன் உரிமையாளர், கோபால்பட்டி):

நத்தம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிற தேங்காய்கள் டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. திண்டுக்கல் நகருக்கு வெளியே சுற்றுச்சாலை அமைக்கும் பணி விரைந்து முடிவடைந்தால், தேங்காய் சரக்கு போக்குவரத்து எளிதாகும். இது, ஒரு அத்தியாவசிய திட்டம் ஆகும்.

டீசல், நேர விரயம் தவிர்ப்பு

வீரக்குமார் (டிராவல்ஸ் உரிமையாளர், கோபால்பட்டி):

நத்தம் பகுதியில் இருந்து திருப்பதி, பழனி, சபரிமலை மற்றும் கர்நாடக, வடமாநில சுற்றுலாவுக்கு கார், டூரிஸ்ட் வேன்களில் செல்வோர் திண்டுக்கல் நகருக்குள் சென்று செல்ல வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க சுற்றுச்சாலை அமைப்பது காலத்தின் கட்டாயம் ஆகும். மதுரை, திருச்சி, கரூர் நான்கு வழிச்சாலைகளோடு சுற்றுச்சாலையை இணைக்கும் பட்சத்தில் டீசல், நேர விரயம் தவிர்க்கப்படும். வாகன நெரிசலில் சிக்காமல் வாகனங்கள் எளிதில் செல்லும்.

சிவசந்திரன் (வியாபாரி, கோபால்பட்டி):

காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் பழனி தைப்பூச திருவிழாவுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நத்தம் சாலையில் தனியாக பேவர்பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செல்லும் பக்தர்கள், பழனி சாலையை சென்றடைய சுற்றுச்சாலை மிகவும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story