கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாக சாலை பூஜை


கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாக சாலை பூஜை
x

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாக சாலை பூஜை நேற்று நடந்தது.

பெரம்பலூர்

யாக சாலை பூஜை

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாகசாலை பூஜை நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு மேல் சிவமறையோர்கள் சரீர சுத்தி நடைபெற்று, மதுரகாளியம்மனுக்கு நன்னீராட்டு நடந்தது. பின்னர் மாலை 4 மணிக்கு மேல் முளையிடல், திருக்காப்பு அணிவிக்கப்பட்டது. குடங்கள் தெய்வமாக்கப்பட்டது. இறை சக்திகள் கும்பத்தில் இறக்கப்பட்டது. வேள்வி சாலை அமைத்து வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து யாகச சாலையில் குண்டத்தில் யாகம் வளர்க்கப்பட்டு, முதல் கால யாக சாலை பூஜை தொடங்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு மேல் முதல் கால யாக சாலை பூஜை முடிவுற்று, பதினாறு தீப வழிபாடு நடந்தது. மறை ஆகமங்கள், திருமுறைகள் ஓதி உணர்ந்து ஒப்படைத்து, பேரொளி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாளை மறுநாள் கும்பாபிஷேகம்

இன்று (திங்கட்கிழமை) 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும், நாளை (செவ்வாய்க்கிழமை) 4, 5-ம் கால யாக சாலை பூஜைகளும் நடக்கிறது. நாளை மறுநாள் காலை 6-ம் கால யாக சாலை பூஜை உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் விமானம், ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றியும், மதுரகாளியம்மன், அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றியும் கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் கற்பகம் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story