கோவையில் ரூ.211 கோடியில் சாலை சீரமைப்பு பணி


கோவையில் ரூ.211 கோடியில் சாலை சீரமைப்பு பணி
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ரூ.211 கோடியில் சாலை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், அ.தி.மு.க. குற்றச்சாட்டில் உண்மை யில்லை என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கோயம்புத்தூர்


கோவையில் ரூ.211 கோடியில் சாலை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், அ.தி.மு.க. குற்றச்சாட்டில் உண்மை யில்லை என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

தி.மு.க. செயற்குழு கூட்டம்

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கோவையில் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவைக்கு இன்று (வியாழக்கிழமை) வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கார் மூலம் ஈரோடு செல்கிறார். பின்னர் அன்று இரவு கரூர் சென்று ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் நாளை (வெள்ளிக்கிழமை) கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

ரூ.211 கோடியில் சாலை சீரமைப்பு பணி

கோவையை தி.மு.க. புறக்கணிப்பதாக அ.தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கவில்லை. அத்துடன் அலங்கார பணிகளுக்காக மட்டுமே பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் கடந்த 1½ ஆண்டில் கோவை மாநகர பகுதியில் மட்டும் ரூ.211 கோடிக்கு சாலைகளை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது நிலம் எடுக்கும் பணி 85 சதவீதம் முடிந்து உள்ளது. விரைவில் அந்த பணிகளும் முடிந்து விடும். அதுபோன்று புறநகர் பகுதிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

மேம்பால பணிகள்

கோவை மாவட்டத்தில் என்னென்ன வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது என்பதை தெரிந்து கொண்டு அ.தி.மு.க.வினர் பதில் கூற வேண்டும். ஏதோ குறை சொல்ல வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களை கூறக்கூடாது. கோவையில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைவில் முடிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். எனவே கோவை மாவட்டத்தில் நடந்து வரும் அனைத்து மேம்பால பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. அலுவலகம் கட்ட வரைபடம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்.பி. ஏ.பி.நாகராஜ், டி.ஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, அசோக்பாபு ஆறுக்குட்டி, மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் எஸ்.எம்.பி.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story