வாகனங்களின் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்-தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை


வாகனங்களின் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்-தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுங்க சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதால் வாகனங்களின் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ராமநாதபுரம்

சுங்க சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதால் வாகனங்களின் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதிக கட்டணம் வசூல்

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன், மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் புதிதாக வாங்கும் போது சாலை வரியாக அரசுக்கு லட்சக்கணக்கான ரூபாய் கட்டிய பின்பே அவற்றை பதிவு செய்து நம்பர் தரப்படுகிறது. இப்படி சாலை வரி கட்டிய வாகனம் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வர சட்டபூர்வமான அனுமதி உண்டு என்ற நிலையில் டோல் கேட் என்ற பெயரில் சுங்கச்சாவடிகளை நாட்டின் பல பகுதிகளில் நிறுவி தினசரி கோடிக்கணக்கில் பணத்தை அரசு வசூலிப்பது நியாயமில்லாத கட்டண கொள்ளையாக உள்ளது.

சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்

மக்களை அவதிக்கு உள்ளாக்கும் இந்த கட்டண கொள்ளை கடந்தகால மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதை மறக்க முடியாது. முந்தைய காங்கிரஸ் அரசின் தவறுகளை திருத்தவே நாங்கள் ஆட்சிக்கு வந்தோம் என கூறிவரும் மத்திய பா.ஜ.க. அரசு இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை உணர்ந்து சுங்க சாவடி கட்டண வசூலை கைவிட வேண்டும்.

அநியாயமான இந்த சுங்க வரி கட்டணத்தை ரத்து செய்து நாட்டின் அனைத்து டோல்கேட்டுகளையும் மூட மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இது முடியாவிட்டால் புதிதாக வாகனங்கள் வாங்கும்போது சாலைவரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும். இதுவே ஓரு நேர்மையான அரசின் சரியான நடவடிக்கையாக இருக்கும். மத்திய அரசு இதுகுறித்து ஆராய்ந்து மக்களின் அதிக வரிச்சுமையை குறைக்க முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story