ரூ.6½ கோடியில் சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரம்
பொள்ளாச்சி-வால்பாறை இடையே ரூ.6½ கோடியில் சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்த மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி-வால்பாறை இடையே ரூ.6½ கோடியில் சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்த மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
அகலப்படுத்தும் பணி
பொள்ளாச்சி-வால்பாறை ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும்.
இந்த நிலையில் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதன் காரணமாக விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை அகலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. தற்போது வால்பாறை ரோட்டில் மணல் மேட்டில் இருந்து கரியாஞ்செட்டிபாளையம் பிரிவு வரை சாலை அகலப்படுத்தப்படுகிறது.
இது தவிர பி.ஏ.பி. பாசன கால்வாய்கள், சிறு பாலங்களை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பாலங்களை அகலப்படுத்தும் பகுதியில் ஒயர்களை மாற்றி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ரூ.6½ கோடி நிதி ஒதுக்கீடு
ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் வால்பாறை ரோட்டில் மணல் மேட்டில் இருந்து கரியாஞ்செட்டிபாளையம் வரை சாலை அகலப்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.6½ கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பில் சின்னாம்பாளையத்தில் மழைநீர் ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் தற்போது 8 மீட்டர் அகலம் உள்ளது. இதை பாலத்தின் இருபுறமும் தலா 4½ மீட்டர் வீதம் அகலப்படுத்தப்படுகிறது.
இது தவிர அதே பகுதியில் சாலையின் குறுக்கே செல்லும் பி.ஏ.பி. கிளை கால்வாய் 16 மீட்டர் அகலத்திற்கு புதிதாக அமைக்கப்படுகிறது. மேலும் 3 சிறு பாலங்களும் கட்டப்படுகிறது. பணிகளை அடுத்த மாதத்திற்குள்(மே) முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.