போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னிமலை ரோடு- சாஸ்திரி நகர் மேம்பாலம் பகுதியில் சாலை விரிவாக்கம் பணி

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னிமலை ரோடு-சாஸ்திரிநகர் மேம்பாலம் பகுதியில் சாலை விரிவாக்கம் பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னிமலை ரோடு-சாஸ்திரிநகர் மேம்பாலம் பகுதியில் சாலை விரிவாக்கம் பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
ஈரோடு மாநகரின் முக்கிய ரோடுகளில் ஒன்று சென்னிமலை ரோடு. ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னிமலை நோக்கி செல்லும் இந்த ரோட்டையொட்டி தொழிற்சாலைகள் அமைந்து உள்ளன. ரெயில்வே டீசல் பணிமனை, மாவட்ட தொழில் மையம், ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கம், டான்சி, ஆவின் தீவன தொழிற்சாலை, அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் அலுவலகம், போக்குவரத்துக்கழக பணிமனை, வேலைவாய்ப்பு அலுவலகம், டான்சி தொழிலகம், அரசு ஐ.டி.ஐ., தொழிலாளர் நலத்துறை அலுவலகங்கள், என்று முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரிகள் இந்த பகுதிகளில் அமைந்து இருக்கின்றன. ஏராளமான குடியிருப்பு பகுதிகளும் உள்ளன.
ஈரோடு சுற்றுவட்டச்சாலை சென்னிமலை ரோட்டை கடந்து செல்கிறது. எனவே எப்போதும் அதிக அளவு வாகனங்கள் செல்லும் ரோடாக சென்னிமலை ரோடு உள்ளது. இங்கு போக்குவரத்துக்கழக பணிமனையின் முன்பு இருந்து சாஸ்திரி நகர் செல்ல ரெயில்வே தண்டவாளத்தை கடந்து மேம்பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதியில் சாலை குறுகலாக அமைந்ததால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே மேம்பாலத்தில் புதிதாக இணைப்பு பாலம் கட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சாலை விரிவாக்கம்
இந்தநிலையில் சாஸ்திரி நகர் பாலத்தையொட்டி சென்னிமலை ரோட்டில் சாலை விரிவாக்கம் பணிகள் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஒருங்கிணைந்த சாலைஉள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி சென்னிமலை ரோட்டினை அகலப்படுத்தி, மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையோரத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யும் வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிக்கவும், மேம்பாலத்தில் இணைப்பு பாலம் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






