திருக்கோகர்ணத்தில் சாலை விரிவாக்க பணி; வாகன போக்குவரத்து மாற்றம்
திருக்கோகர்ணத்தில் சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கம்
புதுக்கோட்டையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை நகரில் அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே மாவட்ட விளையாட்டரங்கம் முதல் கலெக்டர் அலுவலக ரவுண்டானா வரை சாலை விரிவாக்க பணிகள் பெருமளவு முடிவுற்றுள்ளன. இதேபோல் திருக்கோகர்ணத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லக்கூடிய சாலையிலும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருக்கோகர்ணம் அரசு அருங்காட்சியகம் அருகே உள்ள கடை வீதியில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக சாலையில் கூட்டுறவு இணைபதிவாளர் அலுவலகம் வழியாக செல்லக்கூடிய சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இருந்து அந்த வழியாக திருச்சி செல்லக்கூடிய வாகனங்கள் திருவப்பூர் வழியாக ரெயில்வே கேட்டை கடந்து கடைவீதி வழியாகவும், கட்டியாவயல் வழியாக தேசிய நெடுஞ்சாலை சென்று அந்த வழியாகவும் செல்கின்றன.
இந்த சாலை பணி இன்னும் ஒரு வார காலத்திற்கு நடைபெறும் என்பதால் இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என நெடுஞ்சாலை துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். திருவப்பூர் வழியாக வாகனங்கள் செல்வதால் திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் வருகிற நேரத்தில் கேட் மூடப்படுகிற போது போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது.