சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரம்

கோத்தகிரி-குன்னூர் இடையே சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கோத்தகிரி,
கோத்தகிரி நெடுஞ்சாலை துறை சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் சரிவு ஏற்படுவதை தடுக்க தடுப்புச்சுவர் கட்டுவது, மழைநீர் கால்வாய் அடைப்புகளை சுத்தம் செய்வது, குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்வது, மழைநீர் கால்வாய்கள் கட்டுவது, சாலைகளை அகலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரூ.50 லட்சம் செலவில் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் காம்பாய் கடை முதல் கட்டபெட்டு வரை குறுகிய சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாலையோரம் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்படுகிறது. பின்னர் மழைநீர் தேங்காமல் வழிந்தோடும் வகையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மண் திட்டுகள் இடிந்து, மண் சரிவு ஏற்படாமல் தடுக்க தடுப்புச்சுவர்கள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. கோத்தகிரி நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.