சாலை போடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


சாலை போடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x

காங்கயத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலை போடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

காங்கயத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலை போடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை விரிவாக்க பணிகள்

காங்கயம் வழியாக திருப்பூர்,கோவையில் இருந்து கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் ஈரோடு, பழனி,தாராபுரம் உள்பட பல்வேறு ஊர்களுக்கும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. அதுபோன்று காங்கயம் பகுதியில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள்,அரிசி ஆலைகள்,நெய் ஆலைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து பொருட்களை ஏற்றி செல்கின்றன.

இதனால் காங்கயத்தில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் காங்கயம் நகரில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்தசிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஆமை வேகத்தில்

இதுகுறித்து காங்கயத்தை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

காங்கயத்தில் இருந்து கரூர், திருச்சி,கோவை உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள பல ஊர்களுக்கு 500-க்கும் மேற்பட்ட பஸ்கள், 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் காங்கயம் நகரில் பகல்-இரவு நேரங்களில் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் போக்குவரத்தை சரி செய்யவும், விபத்துகளை கட்டுப்படுத்தவும் சாலை விரிவாக்க பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தாராபுரம் ரோட்டில் சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.அந்த சாலையில் காங்கயம் போலீஸ் நிலையத்தில் இருந்து களிமேடு பகுதியில் உள்ள ஒரு பாலப்பணி பாதியில் நிற்கிறது. அதுபோன்று சாலை அமைக்கும் பணி தாமதத்தால் சாலை ஓரத்தில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாலை பணிகளுக்காக கொட்டப்பட்டுள்ள மண் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகிறது.

விரைந்து முடிக்க கோரிக்கை

மேலும் போக்குவரத்து மிகுந்த அந்த பகுதியில் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதோடு, விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் நேரவும் வாய்ப்புகள் உள்ளது. சாலை பணிகள் மெதுவாக நடைபெற்று வரும் இந்த பகுதியில் முக்கியமான அலுவலகங்களும் உள்ளன. இதனால் அங்கு பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

அப்போது அவர்கள் சாலை ஓரத்தில் உள்ள பள்ளங்களில் சிக்கியும், குறுகலான அந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் மோதியும் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் உயிரை காக்க சாலை போடும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story