5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சம்பத், மாவட்ட இணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் காளியப்பன், மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி ஓய்வுக்கு பின் பணி கொடைக்கும் ஓய்வூதிய பலன்களுக்கும் பொருந்த கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் பாலாஜி நன்றி கூறினார்.