சாலை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
வேதாரண்யத்தில் சாலை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் தோப்புத்துறையில் இருந்து குரவப்புலம் செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் குரவப்புலம் எல்லையில் உள்ளது. இந்த இடத்தில் தேத்தாக்குடி தெற்கு ஊராட்சி மற்றும் குரவப்புலம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உரமாக்குவதற்காக அந்த இடத்தில் தொட்டி கட்ட பணிகள் நடந்து வந்தது. அப்போது அந்த வழியே சென்ற வேதாரண்யம் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர், பணியை மேற்பார்வையிட்டு கொண்டிருந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி பணியாளர்களிடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் எங்களை கேட்காமல் எப்படி வேலை செய்கிறீர்கள்? வேலையை நிறுத்துங்கள் என கூறியுள்ளார். இதில் ஊராட்சி மன்றத் தலைவருக்கும், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஊராட்சிமன்ற தலைவரை கண்டிக்கும் வகையில் வேதாரண்யம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் அரசு பணியாளர் சங்க உட்கோட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்க உட்கோட்ட செயலர் வேம்பையன் ஆகியோர் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் நாராயணசாமி ஆகியோர் விளக்கவுரையாற்றினர். இதையடுத்து போராட்டம் தொடர்பாக வேதாரண்யம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில், நெடுஞ்சாலைத்துறை உதவி என்ஜினீயர் மதன்குமார் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.