பட்டா வழங்ககோரிபோச்சம்பள்ளியில் பொதுமக்கள்திடீர் சாலை மறியல்


பட்டா வழங்ககோரிபோச்சம்பள்ளியில் பொதுமக்கள்திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Aug 2023 1:00 AM IST (Updated: 13 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்தூர்:

போச்சம்பள்ளியில் பட்டா வழங்ககோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பழனி ஆண்டவர் நகரில் 45-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்கள் பட்டா கேட்டு விண்ணப்பித்தனர். இதுதொடர்பாக பல ஆண்டுகளாக தாசில்தார் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்றும் அப்பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் மின் இணைப்பு இல்லாமல் மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பழனி ஆண்டவர் நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகம் எதிரே தர்மபுரி- திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது 46 குடும்பத்திற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போச்சம்பள்ளி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் தாசில்தாரிடம் மனு அளித்துவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story