சாலைமறியல்
திருக்குவளை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருக்குவளை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தண்ணீர் நிறுத்தம்
நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்குடி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் 11 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றி குடிநீர்
வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களாக தண்ணீர் முறையாக வரவில்லை. குறிப்பாக கடந்த ஓரிரு வாரங்களாக முற்றிலும் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் கவனத்திற்கும் கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடு்ம் சிரமத்தை தினமும் சந்தித்து வருகின்றனர்.
சாலைமறியல்
இந்தநிலையில் நேற்று குடிநீர் கேட்டு கீழ்குடி உள்ளிட்ட
பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மேலபிடாகை - கொளப்பாடு பிரதான சாலையில் காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர் இன்றி தவிக்கிறோம் என கும்மி அடித்து நூதன போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் வந்து உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டத்தை தொடர்ந்தனர்.
பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தையில் இதுகுறித்து உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டுச்சென்று குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு அங்கிருந்து கலைந்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.