சாலை மறியல்
காவிரியில் பாதாளசாக்கடை கழிவு நீர் கலப்பதை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல் நடந்தது.
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் நேற்று 1 மணி நேரம் தூய்மை இந்தியா இயக்கம் கடைபிடிக்கப்பட்டது. அதன்படி நகர பா.ஜ.க. சார்பில் கூறைநாடு புனுகீஸ்வரர் கோவில் மற்றும் காவிரி துலாக்கட்டம் ஆகிய இடங்களில் பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் அகோரம் தலைமையில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர். காவிரி துலாக்கட்டத்தில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டபோது, பாதாளசாக்கடை கழிவுநீர் ஆள்நுழைவு தொட்டி வழியாக வழிந்தோடி காவிரியில் கலந்தது. இதனை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அகோரம் தலைமையில், வக்கீல் கே.ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் நாஞ்சில்பாலு உள்ளிட்டோர் காவேரி பாலத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.