வாலிபரை வெட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கல்குவாரி குட்டையில் வீசிய கள்ளக்காதலி
சங்கராபுரம் அருகே வாலிபரை கள்ளக்காதலி வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு,
வாலிபரை கொன்று குட்டையில் வீச்சு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவியும், தங்கதுரை (வயது 21) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். காத்தவராயன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வாகன விபத்தில் இறந்து விட்டார். வெள்ளையம்மாளும் கடந்த ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்.
தங்கதுரை தனது டிரைவர் வேலைக்கு சென்று தனது சகோதரிகளை பராமரித்து வந்தார். இந்த நிலையில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக அதே ஊரை சேர்ந்த அய்யனார் மனைவி விஜயபிரியா (29) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கதுரையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி கல்குவாரி குட்டை நீரில் வீசிச் சென்று விட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயபிரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலை மறியல்
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட தங்கதுரையின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 2 மணியளவில் சங்கராபுரம் அடுத்த மேல்சிறுவள்ளூர் கூட்டுரோட்டுக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்கதுரை கொலை வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும். தங்கதுரையின் சகோதரிகளுக்கு நிவாரண உதவி வழங்கவேண்டும் என கூறி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்ததும் வடபொன்பரப்பி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், தங்கதுரை கொலை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்ற உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.