ஊத்தங்கரை பகுதியில் கனமழை:வீடுகளுக்குள் புகுந்த நீரை அகற்றகோரி கிராம மக்கள் சாலை மறியல்அதிகாரிகள் பேச்சுவார்த்தை


ஊத்தங்கரை பகுதியில் கனமழை:வீடுகளுக்குள் புகுந்த நீரை அகற்றகோரி கிராம மக்கள் சாலை மறியல்அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 31 Aug 2023 7:00 PM GMT (Updated: 31 Aug 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை பகுதியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த நீரை அகற்றகோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கனமழை

ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் இரவு முழுவதும் சாலையோரம் இருந்த மரம் முறிந்து விழுந்ததுடன் மின் கம்பிகளும் அறுந்து விழுந்து மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் மின்சார வசதி இல்லாமலும், வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்ததால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நீண்ட நாட்களாக மழைநீர் கால்சாய் வசதி இல்லாமல் அவதிபட்டு வந்தோம். இந்த நிலையில் சமீபத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.

சாலை மறியல்

எனினும் முறையான திட்டமிடல் இல்லாமல் சாலையின் உயரத்தை விட அதிக உயரத்தில் கால்வாய் அமைக்கப்பட்டதால் மழைநீர் முழுமையாக வடியாமல் குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றன என்றனர். இதற்கிடையே நேற்று மழைநீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நிர்வாகத்தை கண்டித்து கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்தங்கரை போலீசார் மற்றும் உதவி கலெக்டர் பாபு ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story