பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி வெப்படையில் உறவினர்கள் சாலை மறியல் போலீசார் பேச்சுவார்த்தை


பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி  வெப்படையில் உறவினர்கள் சாலை மறியல்  போலீசார் பேச்சுவார்த்தை
x

பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி வெப்படையில் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி வெப்படையில் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொய் புகார்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே களியனூரில் கடந்த சில தினங்களுக்கு முன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது களியனூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 35) என்பவரை மோளகவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்பட்டது. இதுகுறித்து மணிகண்டன் வெப்படை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

இந்த நிலையில் ராஜாவின் உறவினர்கள் தரப்பில் வெப்படை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அதில் மணிகண்டன் மற்றும் சிலர் சேர்ந்து ராஜா மீது பொய் புகார் கூறி வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், ராஜாவை மிரட்டிய மணிகண்டன் உள்பட 4 பேரை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

சாலை மறியல்

இந்த நிலையில் உறவினர்கள் புகார் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாவின் உறவினர்கள் 60 பேர் நேற்று காலை வெப்படை 4 ரோட்டில் திரண்டனர். பின்னர் அவர்கள் மணிகண்டன் உள்பட 4 பேரை கைது செய்யக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் இதுகுறித்து அறிந்து அங்கு சென்ற திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் புகார் குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதில் சமாதானம் அடைந்த உறவினர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story