வெப்படையில், அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க கோரி பெற்றோர் சாலை மறியல்
வெப்படையில், அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க கோரி பெற்றோர் சாலை மறியல்
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிபாளையம்- சங்ககிரியை இணைக்கும் பிரதான சாலையில் பள்ளி உள்ளதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது.
இதனால் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கூறியும், பள்ளி அருகே வேகத்தடை அமைக்க கோரியும் நேற்று பெற்றோர் பள்ளி அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு துறை அதிகாரிகளும் பெற்றோரை சமாதானப்படுத்தி விரைவில் வேகத்தடை அமைத்து தரப்படும் என உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் பள்ளிபாளையம்- சங்ககிரி சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.