மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் தேர்தல் ஒத்திவைப்பை கண்டித்து பாலப்பட்டி அரசு பள்ளி முன்பு பெற்றோர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் தேர்தல் ஒத்திவைப்பை கண்டித்து  பாலப்பட்டி அரசு பள்ளி முன்பு பெற்றோர்கள் சாலை மறியல்  போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2022 6:45 PM GMT (Updated: 7 Oct 2022 6:45 PM GMT)

பாலப்பட்டி அரசு பள்ளியில் மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை கண்டித்து பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பாலப்பட்டி அரசு பள்ளியில் மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை கண்டித்து பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடிப்படை வசதிகள்

பரமத்திவேலூர் அருகே உள்ள பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்றும், கழிப்பிடங்கள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதனை சரி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ேமலும் வகுப்பறைகள், பள்ளி வளாகங்களை மாணவ, மாணவிகளே சுத்தம் செய்து வருவதாகவும் புகார் எழுந்தது. இதனை கண்டித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெற்றோர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் பெரியசாமியை முற்றுகையிட்டனர். மேலும் அடிப்படை வசதிகள் செய்து, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் கடந்த மாதம் 9-ந் தேதி பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் கல்வி அதிகாரிகள் முன்னிலையில் ‌பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாக‌ தலைமை ஆசிரியர் அறிவித்தார்.

இதையொட்டி நேற்று நடக்க இருந்த தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் பின்னர் நடத்தப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனை அறிந்த பெற்றோர்கள் பலர் பள்ளி முன்பு திரண்டனர். பின்னர் பள்ளி மேலாண்மை குழு தேர்வு செய்வதில் முறைகேடு நடப்பதாகவும், தேர்தலை இன்று ஒத்திவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், மோகனூர் தாசில்தார் ஜானகி ஆகியோர் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விரைவில் முறையாக கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த பெற்றோர் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் ‌சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story