புதர் மண்டிய கால்வாயால் சாலைகள், குடியிருப்புகளில் வெள்ளம் புகும் அபாயம்


புதர் மண்டிய கால்வாயால் சாலைகள், குடியிருப்புகளில் வெள்ளம் புகும் அபாயம்
x

பள்ளிகொண்டா பகுதியில் பாலாற்றுக்கு செல்லும் திப்பசமுத்திரம் ஏரிக்கால்வாய் உள்பட பல்வேறு கால்வாய்கள் தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடப்பதால் வெள்ளம் ஏற்படும்போது ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றை தூர்வார வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

திப்பசமுத்திரம் ஏரி

வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றாக திப்பசமுத்திரம் ஏரி திகழ்கிறது. ஒடுகத்தூர் உத்திரகாவேரி ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் அகரம் ஆற்றின் வழியாக அந்த தண்ணீரும் திப்பசமுத்திரம் ஏரியில் வந்து கலக்கின்றது.

மேலும், பள்ளிகொண்டா ஏரிக்கு மலைத்தொடர்களில் இருந்து கானாறு வழியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீரும் திப்பசமுத்திரம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஏரிகளில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டிய பின்னர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் கால்வாய்கள் மூலமாக பாலாற்றை சென்றடையும்.

புதர்மண்டி கிடக்கிறது

இ்ந்த நிலையில் ஏரிகளில் இருந்து பாலாற்றுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் என புதர்கள் மண்டி நீர் செல்லும் வழித்தடமே தூர்ந்து போய் உள்ளது. இதனால், கடந்த 2 வருடமாக ஏரிகளில் நீர் நிரம்பிய பின்னர் மதகுகளில் வெள்ளநீர் வழிந்து தூர்ந்துபோன கால்வாய்களில் செல்ல முடியாமல் பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் சென்றதால் அந்த நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த வருடமும் நீர்வரத்து கால்வாய் புதர்கள் மண்டி தூர்ந்து போய் உள்ளதால் வெள்ளநீர் சாலைகள் மற்றும் அருேக உள்ள ரங்கநாதர் நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடும் அபாயத்தில் உள்ளனர்.

எனவே, சேதமடைந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாமல் உள்ள சாலைகளை சீரமைத்து, பள்ளிகொண்டா ஏரியிலிருந்து பாலாற்றுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி கரைகளை பலப்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story