விருதுநகர், சாத்தூர் ரெயில் நிலைய சாலைகளை சீரமைக்க வேண்டும்
விருதுநகர், சாத்தூர் ரெயில் நிலைய சாலைகளை சீரமைக்க வேண்டும் என பாதுகாப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பாஸ்கரன், தங்கவேலு மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் அழகு சுந்தரம் முகமதுஎகியா சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகு சுந்தரம், விருதுநகர் ரெயில்வே பீடர் ரோடு சேதமடைந்துள்ள நிலையில் கடந்த பல கூட்டங்களில் வலியுறுத்தியும் இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சாத்தூர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையையும் சீரமைக்க இதுவரை பலமுறை எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் புதிய பஸ் நிலையம் செயல்பட மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
விருதுநகர் ரெயில்வே பீடர் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் லீனாசைமன் உறுதி அளித்தார். கலெக்டர் ஜெயசீலன் கூறும்போது, நெடுஞ்சாலைகளில் தேவையில்லாத வேகத்தடைகளை அகற்றுமாறும் ஒரே இடத்தில் அதிக வேகத்தடைகள் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.
மேலும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.