சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும்


சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும்
x

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

வேலூர்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலார் பகுதியில் கால்வாய் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக வரப்பெற்ற புகாரின் பேரில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் இன்று திடீரென ஆய்வு செய்தார்.

அங்குள்ள பி.எப். அலுவலகம் அருகே உள்ள தெருக்களில் தார்சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

அப்போது அங்கு பக்கவாட்டு தெருக்களில் மழைநீர் தேங்காத வண்ணம் வெளியேற்ற ஏதுவாக குழாய்களை பதிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பி.எம். வீடுகள் குடியிருப்பு பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவரிடம் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருந்தகத்தில் போதுமான அளவிற்கு மருந்துகள் இருப்பு உள்ளதா? என்று கேட்டறிந்தார்.

மேலும் அங்கு பதிவேடுகளையும் பார்வையிட்டார்.

சாலைகளை பராமரிக்க வேண்டும்

அதைத்தொடர்ந்து ஒயாசீஸ் 1-வது, 2-வது, 5-வது தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலைகள் முறையாக பராமரிக்காமல் இருந்தது.

ஆங்காங்கே குப்பைகள், கட்டிட கழிவுகள் சிதறி கிடந்தன. அதைப்பார்த்த கலெக்டர் சாலை அமைத்தால் மட்டும் போதாது அதை பராமரிக்க வேண்டும். குப்பைகளை அகற்றி தூய்மையாக வைக்க வேண்டும். அதை தினமும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நக்கீரர் தெரு சந்திப்பு பகுதியில் சாலை அமைக்கப்படாமல் இருந்தது. மேலும் அருகே உள்ள பிற தெருக்களிலும் சாலைகள் அமைக்கப்படாமல் இருந்தது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

பின்னர் கலெக்டர் அதிகாரிகளிடம் கூறுகையில், ஒரு வாரத்தில் பாதாள சாக்கடை தொடர்பான பணிகள் முடிக்கப்பட்டு சாலைகள் அமைக்கப்பட வேண்டும். மீண்டும் நான் இங்கு வந்து ஆய்வு செய்வேன்.

மேலும் அருகே உள்ள பல தெருக்களில் ஆய்வு செய்து அங்கு சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள் அமைத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரி சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மாநகராட்சி மேயர் சுஜாதா, கவுன்சிலர்கள் ஆர்.பி.ஏழுமலை, சக்ரவர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story