அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே வரவேண்டும்


அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே வரவேண்டும்
x

மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜை விழாவிற்கு வருபவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே வர வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

சிவகங்கை


மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜை விழாவிற்கு வருபவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே வர வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

குருபூஜை விழா

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பத்தூரில் நாளை 24-ந் தேதி மருதுபாண்டியர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியும், வருகிற 27-ந்தேதி காளையார் கோவிலில் மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், வருகிற 30-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குரு பூஜை விழா நடைபெறுகிறது.

இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு மரியாதை செலுத்து வதற்கு பதிவுபெற்ற அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட பகுதி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன் அனுமதி மற்றும் வாகன முன்அனுமதியை பெற்றும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி வரவேண்டும் அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது வாகனத்தின் ஆர்.சி. புத்தக நகல், இன்சூரன்ஸ் நகல், ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் நகல், வாகனத்தில் பயணம் செய்பவர்களின் பெயர் மற்றும் முழுமுகவரி, ஆதார் நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

முன்அனுமதி

முன்அனுமதி பெற்று மரியாதை செலுத்த வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டும் வரவேண்டும். வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்கள், சரக்கு வேன், டிராக்டர், இருசக்கர வாகனங்கள், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை. வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது.

வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்ப்பதுடன், ஒலிபெருக்கிகள் ஏதும் பொருத்தி செல்லவோ, சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. மரியாதை செலுத்த அனுமதி பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்வதுடன், வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் எந்த இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தக்கூடாது.

ஒதுக்கப்பட்ட நேரம்

அனுமதி பெற்று மரியாதை செலுத்த வரும் தலைவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். ஒலிபெருக்கி வைத்தல், வெடி போடுதல், சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல், ஜோதி ஓட்டம், முளைப்பாரி எடுத்தல், பால்குடம் எடுத்தல், ஊர்வலமாக வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கவும் அனுமதி இல்லை. இந்த முறை புதிதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் எளிதில் வாகன அனுமதி பெறும்முறை எளிதாக்கப்பட்டு உள்ளது. இதன்படி அவர்கள் தங்கள் பகுதி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலேயே அனுமதியை பெற்று கொள்ளலாம்.

இதற்காக போலீஸ் மண்டலம் வாரியாக கலர் அனுமதி அட்டைகள் வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைக்கபட்டுள்ள சோதனை சாவடியை தாண்டி பாஸ் இல்லாத எந்த வாகனமும் அனுமதிக்கப்பட மாட்டாது.

வழித்தடம்

நாளை 24-ந் தேதி திருப்பத்தூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு அஞ்சலி செலுத்த வரும் சென்னை திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புதுக் கோட்டை, திருமயம், கீழசீவல்பட்டி, வழியாக திருப்பத்தூர் வரவேண்டும். இதேபோல் திரும்பி போகும் போது அதே வழித்தடத்திலேயே செல்ல வேண்டும். இது போல் கோவை, மதுரை, திருப்பூர், தேனி,திண்டுக்கல், மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மதுரை மேலூர், எஸ்.எஸ்.கோட்டை வழியாகவோ அல்லது நத்தம், கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி வழியாக அல்லது மதுரை, மேலூர் வழியாக திருப்பத்தூர் வந்து திரும்ப இதே வழியில் செல்ல வேண்டும். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story