போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள்
சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட சிதம்பரம் சாலை, கொள்ளிடம் முக்கூட்டு, ரெயில்வே ரோடு, ஈசானிய தெரு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தென்பாதி, பிடாரி மேல வீதி, அரசு ஆஸ்பத்திரி சாலை, கோவில்பத்து, கடைவீதி, தெற்கு வீதி, தேர் மேலவீதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன.
போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகின்றன. மேலும் சாலையில் நடந்து செல்வோர்களை கால்நடைகள் அச்சுறுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விபத்து
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில், சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு சாலைகளில் பள்ளி செல்லும் நேரங்களில் ஏராளமான கால்நடைகள் சாலையில் நின்று கொண்டு ஒன்றே ஒன்று மோதிக் கொள்கின்றன. அப்பொழுது சாலையில் நடந்து செல்பவர்களை எதிர்பாராமல் அவை முட்டி காயங்கள் ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி நகர் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கும், மாணவர்களுக்கும், இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் மேலும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டுமென கூறினார்.