போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள்
பந்தலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பந்தலூர்,
பந்தலூர் பஜார் பகுதியில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. அவை போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் உலா வந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் பந்தலூரில் இருந்து கோழிக்கோடு, கூடலூர் செல்லும் சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அவ்வப்போது கால்நடைகள் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளை முட்டும் வகையில் துரத்துகிறது. மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை முட்டி கீழே தள்ளி விடுவதால், காயமடைந்து வருகின்றனர். அத்துடன் சாலையின் நடுவே கால்நடைகள் ஓய்வெடுத்து வருவதால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலையோரத்தில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள காய்கறிகள், பழங்களை கால்நடைகள் தின்று வருகின்றனர். இதனால் வியாபாரிகள் பாதிப்படைகின்றனர். எனவே, சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.