ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த முன்னாள் போலீஸ்காரர் உள்பட 8 பேர் கைது
வேடசந்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த முன்னாள் போலீஸ்காரர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம் மற்றும் 21 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
ரியல் எஸ்டேட் அதிபர்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நால்ரோடு பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 40). ரியல் எஸ்டேட் அதிபர். அவருடைய மனைவி கலையரசி (35). இந்த தம்பதிக்கு தனுஸ்ரீ (14) என்ற மகளும், ராமச்சந்திரன் (7) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த மாதம் 25-ந்தேதி சீனிவாசன் வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டார். வீட்டில், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் மட்டும் இருந்தனர். அப்போது 16 பேர் ெகாண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்களில் 8 பேர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டனர். மீதமுள்ள 8 பேர் கொண்ட கும்பல் பின்புற சுவர் மீது ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்தனர்.
இதனை பார்த்த கலையரசியும், அவரது குழந்தைகளும் அதிர்ச்சியடைந்து அலறினர். உடனடியாக, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர். பின்னர் குழந்தைகள் தனுஸ்ரீ, ராமச்சந்திரன் ஆகியோரின் கழுத்தில் கத்தியை வைத்து, வீட்டில் உள்ள நகை-பணத்தை எடுத்து தருமாறு கூறி கலையரசியை மிரட்டினர். அவர் பணம், நகை ஏதும் இல்லை என்று கூறினார்.
நகை, பணம் கொள்ளை
பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கடப்பாரை மற்றும் ரம்பத்தின் மூலமாக வீட்டில் வைத்திருந்த 5 பீரோக்களையும் உடைத்தனர். அதில் இருந்த 43 பவுன் நகைகள் மற்றும் ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டுகள் துர்காதேவி, கோகுலகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வாகன சோதனை
இந்த நிலையில் நேற்று திருச்சி மாவட்ட எல்லையான தங்கம்மாபட்டி சோதனை சாவடியில் வேகமாக வந்த காரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் வந்த ஒரு பெண் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் துருவி, துருவி விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா உத்தமநாயக்கனூரை சேர்ந்த சண்முக சூரியாவின் மனைவி ஜோதி (வயது 36), சிராஜூதீன், பெரம்பலூரை சேர்ந்த செல்வகுமார் (45), சென்னை பூந்தமல்லியை சேர்ந்த தீனதயாளன் (39), ஓசூரை சேர்ந்த ரகு (35), பெங்களூருவை சேர்ந்த சுரேஷ் (22), சதீஷ், திருவள்ளூரை சேர்ந்த பாஸ்கர் (39) என்பது தெரியவந்தது. அவர்கள் வேடசந்தூர் அருகே சாலையூர் நால்ரோடு பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்ெகாண்டனர்.
முன்னாள் போலீஸ்காரர்
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் ரியல் எஸ்டேட் புரோக்கரான தீனதயாளனிடம் நிலம் வாங்குவதற்கு சீனிவாசன் ரூ.4 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார். அதில் சீனிவாசனுக்கும், தீனதயாளனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சீனிவாசனிடம் பணம், நகை இருப்பதை தீனதயாளன் தெரிந்து கொண்டார்.
இதையடுத்து சீனிவாசனின் வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடிக்க தீனதயாளனும், ஜோதியும் திட்டமிட்டனர். இதற்காக ஜோதியின் நண்பரான சென்னையில் போலீஸ்காரராக வேலை பார்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட செல்வகுமாரை அவர்கள் தொடர்பு கொண்டனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து சீனிவாசன் வீட்டில் எப்போது இருப்பார் என்று சில நாட்கள் அந்த பகுதியில் தங்கி நோட்டமிட்டனர். சம்பவம் நடந்த அன்று வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் இருப்பதை உறுதி செய்தனர். அதன் பின்னர் தீனதயாளன், ஜோதி, செல்வக்குமார் மற்றும் அவருடைய கூட்டாளிகளான ரகு, சதீஷ் உள்பட 16 பேர் கொண்ட கும்பல் சீனிவாசன் வீட்டுக்குள் சென்று கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
8 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 பவுன் நகைகள், ரூ.1½ லட்சம், ஒரு கார் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாராட்டினார்.