அடுத்தடுத்து கைவரிசை; கொள்ளையர்கள் 2 பேர் கைது


அடுத்தடுத்து கைவரிசை; கொள்ளையர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:45 PM GMT)

ராமநாதபுரத்தில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அடுத்தடுத்து கொள்ளை

ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்தவர் மனோகரன். கோவில் பூசாரியான இவரின் வீட்டில் கடந்த 14-ந் தேதி மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை பணம் முதலியவை திருடுபோனது. ராமநாதபுரம் ராணி சத்திரத்தெருவை சேர்ந்த வங்கி உதவி மேலாளர் கேசவன் வீட்டில் வெள்ளி குத்துவிளக்கும், அவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த சதீஸ் வீட்டில் 6 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.28 ஆயிரம் ஆகியவையும் கொள்ளை போனது. அதேபோல் கீழக்கரை பாரதிநகரில் மோகன்ராஜா வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருடு போனது.

இந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

2 பேர் கைது

விசாரணையில் கொள்ளையர்கள் வெளிமாவட்டத்தில் இருந்து வந்ததும், கொள்ளையடிப்பதற்காக ராமநாதபுரத்தில் பழைய வாகனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்தியதும் தெரிந்தது. அதன் அடிப்படையில் கொள்ளையர்கள் சென்னை திருமுல்லைவாயில் வெங்கடாசலம் நகரை சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 35), திருவாரூர் மாவட்டம் கொரடச்சேரி அஞ்சல், பனங்கரை பத்தூர் பகுதியை சேர்ந்த முருகானந்தம் (36) என்பது தெரியவந்தது.

இவர்க கொள்ளையடித்துவிட்டு ஏர்வாடியில் அறை எடுத்து தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சென்று இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

உல்லாசம்

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் இவர்கள் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருவர் மீதும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இருவரும் தமிழகத்தையே கலக்கி வந்த கொள்ளையர்கள்ஆவர். கொள்ளையடித்த பணத்தை கொண்டு துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பதற்கு செலவழித்துள்ளனர். இருவரும் செல்போனை பயன்படுத்தாமல் தங்கள் வசம் உள்ள பெண்களின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து கொள்ளையடிக்க சென்று வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து 22 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், பித்தளை பொருட்கள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story