2 வீடுகளின் கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சி
மயிலாடுதுறையில் 2 வீடுகளின் கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் 2 வீடுகளின் கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
முயற்சி
மயிலாடுதுறை ஆழ்வார்குளம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது45). இவர் தனது மனைவியுடன் சம்பவத்தன்று தஞ்சை மாவட்டம் அகரமாங்குடியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்த போது 2 அறைகளில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை மேற்கொண்டனர்.
வலைவீச்சு
இந்த வீட்டில் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் இல்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.மேலும் இந்த வீட்டின் அருகே உள்ள மாப்படுகை மெயின் ரோட்டில் வசிக்கும் பழனிவேல்(65) தனது குடும்பத்துடன் நேற்றுமுன்தினம் சென்னைக்கு சென்றார். அவரது வீட்டிலும் திருடர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று திருட முயற்சித்துள்ளனர். ஒரே சாலையில் 2 வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.