திருடிய வீட்டில் பழங்கள், உணவுகளை சாப்பிட்டு சென்ற கொள்ளையர்கள்
திருமங்கலம் அருகே திருடிய வீட்டில் பழங்கள், உணவுகளை சாப்பிட்டு சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே திருடிய வீட்டில் பழங்கள், உணவுகளை சாப்பிட்டு சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு
திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் ஒத்தவீடு பகுதியில் வசித்து வருபவர் கட்டிடத் தொழிலாளியான சசிகுமார்- பிரசன்னா தம்பதியினர். இவர்கள் தனது குடும்பத்துடன் நேற்று இரவு கீழே உள்ள வீட்டை பூட்டி விட்டு மாடியில் படுத்து தூங்கி உள்ளனர். வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து உள்ளே இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் பக்கத்து வீட்டு விவசாயி மாயகிருஷ்ணன் வீடு திறந்திருந்தது. வீட்டின் உள்ளேயே மாயகிருஷ்ணன் மூத்தமகள் இருளாயி தூங்கி கொண்டு இருந்தார். அவருடைய கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். கழுத்தில் இருந்த செயினை மர்ம நபர்கள் அறுத்துக்கொண்டு செல்வதை கண்டு இருளாயி திருடன், திருடன் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அனைவரும் மர்மநபர்களை பிடிக்க முயன்றார். ஆனால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
பழங்கள், உணவை சாப்பிட்ட கொள்ளையர்கள்
சத்தம் கேட்டு சசிகுமார் வீட்டின் கீழே இறங்கி வந்து பார்த்தபோது அவரது வீட்டில் இருந்த 3 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருடு போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து இருவரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே திருடுவதற்கு முன்பு கொள்ளையர்கள் சசிகுமார் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து அங்கிருந்த பழங்கள், உணவுகளை சாப்பிட்டு உள்ளனர். அதன்பிறகு சமையல் அறையில் இருந்த தோசை கரண்டியை பயன்படுத்தி பீரோவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்று உள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.