டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை


டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை
x

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே காவலாளியை வாளால் வெட்டி டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடித்த 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

டாஸ்மாக் கடை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து கலியாந்தூர் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மலையரசு, குமார், துரையரசு ஆகியோர் விற்பனையாளர்களாகவும், முத்துக்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையாளராகவும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்தவுடன் டாஸ்மாக் கடையை அடைத்துவிட்டு அவர்கள் புறப்பட்டு சென்றனர். அதே பகுதியை சேர்ந்த காவலாளி தீர்த்தம்(வயது 65) என்பவர் டாஸ்மாக் கடை காவல் பணியில் ஈடுபட்டு உள்ளார்.

காவலாளிக்கு வெட்டு

இந்த நிைலயில் நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் 2 பேர் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர். அங்கு காவல் பணியில் இருந்த காவலாளியிடம் மதுபாட்டில் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு காவலாளி, நாளை கடை திறந்த பிறகு வந்து மதுபாட்டில்கள் வாங்கி கொள்ளுங்கள். இப்போது மதுபாட்டில்கள் இல்லை என்று கூறி இருக்கிறார். இதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் மேலும் 3 பேருடன் அங்கு வந்தனர். இதை பார்த்ததும் ஏதோ விபரீதம் நிகழ போகிறது என்று உணர்ந்த காவலாளி அவர்களை தடுத்தார். உடனே அவர்கள் காவலாளியை துணியால் கட்டி போட்டனர்.

அதன்பின்னர் அந்த கும்பல் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ஷட்டரை இரும்பு ராடு மூலம் நெம்பியுள்ளனர். அப்போது காவலாளி தீர்த்தம் முனங்கவே அங்கு நின்றிருந்த 2 பேர் தாங்கள் வைத்திருந்த வாளால் காவலாளியை சரமாரியாக வெட்டினர்.

மதுபாட்டில்கள் திருட்டு

அதன்பின்னர் ஷட்டரை திறந்து உள்ளே புகுந்த அந்த கும்பல் அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 2,568 மதுபாட்டில்களை மினிவேனில் ஏற்றி கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது. கொள்ளை போன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.5 லட்சத்து 31 ஆயிரம் ஆகும்.

அதன்பின்னர் காவலாளி தீர்த்தம் அருகில் உள்ள விவசாய பம்பு செட்டில் இருப்பவரிடம் தகவல் கூறி இருக்கிறார். அதன்பிறகு அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து மானாமதுரை துணை சூப்பிரண்டு கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா, மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காயம் அடைந்த காவலாளியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளை நடந்த டாஸ்மாக் கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாய் கிராம்போ வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து திருப்புவனம் சாலை வழியாக ஓடி நான்கு வழி சாலை பக்கம் உள்ள வேகத்தடை அருகே நின்று விட்டது. மேலும் கொள்ளை நடந்த கடைக்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் எதுவும் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்தனர்.

5 பேருக்கு வலைவீச்சு

இது குறித்து திருப்புவனம் போலீசில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் முத்துக்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய 5 பேரை தேடி வருகிறார்கள்.


Next Story