அடகு கடை உள்பட 2 கடைகளில் 2 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள்- ரூ.17 ஆயிரம் கொள்ளை
கொரடாச்சேரி அருகே அடகு கடை உள்பட 2 கடைகளில் 2 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.17 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொரடாச்சேரி அருகே அடகு கடை உள்பட 2 கடைகளில் 2 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள்- ரூ.17 ஆயிரம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அடகு கடை
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள கண்கொடுத்தவனிதம் கடைத்தெருவில் கலையமுதன் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கலையமுதன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இவருடைய கடைக்கு அருகில் முகமது இக்பால் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முகமது இக்பால் தனது மளிகை கடையினை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடைக்குள் கல்லாவில் இருந்த ரூ.17 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
போலீசார் விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்கு வெளியே வந்து பார்த்தபோது அருகே உள்ள அடகு கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கலையமுதனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து கலையமுதன் அடகுகடைக்கு வந்து பார்த்தபோது அவருடைய கடையிலும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு சென்று அடகு கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.
2 பவுன் நகைகள்
இதில் நள்ளிரவில் மர்ம நபர்கள் 3 பேர் கடைக்கு வந்ததும், அவர்கள் கண்காணிப்பு கேமரா மீது சாக்கை போட்டு மூடி தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. கொள்ளையர்கள் 3 பேரும் அரை நிர்வாண கோலத்தில் கொள்ளையடித்து சென்றதும் கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அடகு கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 450 கிராம் வெள்ளி பொருட்கள், 2 பவுன் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 கடைகளிலும் இருந்து 2 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.17 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அடுத்தடுத்த கடைகளில் நடந்த கொள்ளையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.