ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை: குண்டர் தடுப்பு சட்டத்தில் சினிமா நடிகர் கைது


ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை: குண்டர் தடுப்பு சட்டத்தில் சினிமா நடிகர் கைது
x

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை: குண்டர் தடுப்பு சட்டத்தில் சினிமா நடிகர் கைது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நால்ரோடு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான சீனிவாசன் என்பவரது வீட்டில் இருந்த ரூ.18 லட்சம், 43 பவுன் நகைகளை ஒரு கும்பல் கடந்த ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி கொள்ளையடித்து சென்றது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜோதி, செல்வகுமார், பாலசுப்பிரமணியன் ஆகிய 3 பேரும் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொள்ளைக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஹரி (39) என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. சமீபத்தில் இவர், கைது செய்யப்பட்டு வேடசந்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சில சினிமா படங்களில் நடித்துள்ள ஹரி மீது ஆள்கடத்தல், கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட ஹரியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கலெக்டர் விசாகனிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஹரியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை மதுரை மத்திய சிறையில் வேடசந்தூர் போலீசார் அடைத்தனர்.


Next Story