100-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய கொள்ளை கும்பல் தலைவன் கைது
100-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய கொள்ளை கும்பல் தலைவன் கைது
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டார். 100-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அவர், தஞ்சைக்கு காரில் வந்து லாரிகளில் பேட்டரி திருடிய வழக்கில் சிக்கினார்.
குட்ஷெட் லாரிகள்
தஞ்சை குட்ஷெட் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த லாரிகள், நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான நெல்மூட்டைகளை வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு கொண்டு செல்வது மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வினியோகம் செய்வதற்காக ரெயில்களில் வரும் அரிசி மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்வது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இது தவிர கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்மூட்டைகளை இருப்பு வைப்பதற்காக சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறது. இவ்வாறு செல்லும்போது இரவு நேரங்களில் பணிகளை முடித்து விட்டு சேமிப்பு கிடங்குகள் முன்பும், குட்ஷெட் பகுதியிலும் லாரிகளை நிறுத்துவது வழக்கம்.
பேட்டரிகள் திருட்டு
இவ்வாறு நிறுத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட லாரிகளில், காரில் வந்த கொள்ளை கும்பல் பேட்டரிகளை திருடிச்சென்றது. இது குறித்து குட்ஷெட் லாரி உரிமையாளர் சங்க தலைவர் ராஜகுமார் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீஸ் ஏட்டுகள் உமாசங்கர், ராஜேஷ் மற்றும் போலீஸ்காரர்கள் அருள்மொழிவர்மன், அழகு, நவீன், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
கொள்ளை கும்பல் தலைவன் கைது
இதையடுத்து தனிப்படையினர் பேட்டரி திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலின் தலைவனை திருச்சியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த போது மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருச்சி பாலக்கரை அருகே உள்ள முதலியார்சத்திரம் குட்ஷெட் ரோட்டை சேர்ந்த அல்லாபிச்சை (வயது 37) என்பது தெரிய வந்தது.
அல்லாபிச்சை மீது ஆள் கடத்தல், வழிப்பறி, சங்கிலி பறிப்பு, பூட்டிய வீடுகளை உடைத்து திருடுவது மற்றும் செல்போன் டவர் பேட்டரிகளை திருடுவது, லாரிகள், பொக்லின் எந்திரம் போன்றவற்றில் உள்ள பேட்டரிகளை திருடுவது என 100-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் தமிழகம் முழுவதும் நிலுவையில் இருந்து வருகிறது. பல்வேறு மாவட்ட போலீசாரும் அல்லாபிச்சையை தேடி வந்த நிலையில் தஞ்சை தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
கார்-10 பேட்டரிகள் பறிமுதல்
கைதான அல்லா பிச்சையிடம் இருந்து 10 லாரிகளின் பேட்டரிகள், ஒரு கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அல்லாபிச்சையை தனிப்படை போலீசார், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அல்லாபிச்சையை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்குகள் தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.