டிரைவர் வீட்டில் 29 பவுன் நகை, பணம் கொள்ளை
டிரைவர் வீட்டில் 29 பவுன் நகை, பணம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டிரைவர் வீட்டில் 29 பவுன் நகை, பணம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டிரைவர்
மதுரை பழங்காநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 43). டிரைவரான இவர் பகுதி நேரமாக ரியல் எஸ்டேர் தொழிலும் செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் காலை இவர், குடும்பத்துடன் அவனியாபுரம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பின் பக்க கதவை உடைத்துள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 29 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதற்கிடையே, பொருட்கள் வாங்கிவிட்டு மதியம் மாரிமுத்து வீட்டிற்கு வந்தார். அப்போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருடர்கள் விட்டு சென்ற தடயங்களை சேகரித்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மாரிமுத்து தனது மகள்களின் திருமணத்திற்காக பணம், நகை சேமித்து வைத்திருந்ததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.