பூச்சி மருந்து விற்பனை கடையில் ரூ.4¾ லட்சம் கொள்ளை
பண்ருட்டியில் உள்ள பூச்சி மருந்து விற்பனை கடையில் ரூ.4¾ லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பண்ருட்டி,
பூச்சி மருந்து விற்பனை கடை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வ.உ.சி நகரை சேர்ந்தவர் சுந்தர் (வயது 50), பண்ருட்டி தாயாரம்மாள் நகரை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர்கள் இருவரும் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் உள்ள காந்தி பூங்கா நகரசபை வணிக வளாகத்தில் விதை மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சுந்தர் மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றனர். பின்னர் சுந்தர் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க ஷட்டர் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் பதறிய சுந்தர் இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதனிடையே கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் கொள்ளை நடந்த கடையில் இருந்து பஸ் நிலையம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கொள்ளை நடந்த கடையில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
பரபரப்பு
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என விசாரணை நடத்தியதுடன், அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருக்கும் பூச்சி மருந்துக்கடையில் பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.