கார் கண்ணாடியை உடைத்து ரூ.70 லட்சம் கொள்ளை
கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.70 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீளமேடு
கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.70 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் அதிபர்
கோவை கோவில்பாளையம் அடுத்த வெள்ளானப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி (வயது 50). ரியல் எஸ்டேட் அதிபர். நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் லட்சம் பணத்துடன் காரில் புறப்பட்டார்.
இந்த பணத்தை அவரது நண்பரான கோவை ஹோப்ஸ் பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் கண்ணன் என்பவரிடம் கொடுப்பதற்காக எடுத்து சென்றுள்ளார். பின்னர் அவர், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் முன் காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார்.
ரூ.70 லட்சம் கொள்ளை
சாப்பிட்டு முடித்து விட்டு ஓட்டலை விட்டு வெளியே வந்த ஈஸ்வர மூர்த்தி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் அவர் காரில் வைத்திருந்த ரூ.70 லட்சம் கொள்ளை போனதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் உடனடியாக பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது:-
கண்காணிப்பு கேமரா
ஈஸ்வரமூர்த்தி காரை நிறுத்தி விட்டு ஓட்டலுக்கு செல்வதை அறிந்த மர்ம நபர்கள், அவரது கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.
ஓட்டல் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அவரது கார் வந்த வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.
அவரை யாராவது பின் தொடர்ந்து வந்து பணத்தை கொள்ளையடித்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவருக்கு தெரிந்த நபர்கள் யாராவது?
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.