13 ஆண்டுகள் பணியாற்றிய மோப்ப நாய் ராக்கி சாவு


13 ஆண்டுகள் பணியாற்றிய மோப்ப நாய் ராக்கி சாவு
x

புதுக்கோட்டை போலீசில் பணியாற்றிய மோப்பநாய் ராக்கி செத்ததையடுத்து 24 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

மோப்ப நாய் ராக்கி

புதுக்கோட்டை மாவட்ட போலீசில் கடந்த 13 ஆண்டுகளாக ராக்கி என்ற துப்பறியும் மோப்ப நாய் பணியாற்றி வந்தது. இந்த துப்பறியும் ராக்கி நாய் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் பிரதமர், குடியரசு தலைவர் உள்ளிட்ட வி.ஐ.பி.கள் வரும்போது வெடிகுண்டு சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. மேலும் பல்வேறு வழக்குகளில் போலீசுக்கு உதவியாகவும், இந்த நாய் செயல்பட்டு வந்தது. கடந்த 13 ஆண்டுகளாக போலீசுக்கு உதவியாக இருந்த ராக்கி தற்போது டி.எஸ்.பி. ரேங்கில் உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் ராக்கி ஓய்வு பெற்றது. இந்நிலையில் ராக்கி உடல்நல குறைவால் நேற்று முன்தினம் நள்ளிரவு செத்து போனது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ராக்கியின் உடல் வைக்கப்பட்டு அதற்கு போலீஸ் அதிகாரிகள் மலர் மாலை ைவத்து அஞ்சலி செலுத்தினர்.

24 குண்டுகள் முழங்க அடக்கம்

இதில் போலீஸ்காரர் ஒருவர் ராக்கியின் உடலைக் கண்டு அழுது புலம்பியது காண்போரை கண் கலங்க வைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மோப்ப நாய் ராக்கியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் 8 போலீசார் பல்வேறு மரியாதைகள் செலுத்தினர். பின்னர் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராக்கிக்கு மரியாதை செலுத்தப்பட்டு முறைப்படி மோப்ப நாய் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story