வாரிசு-துணிவு பேனர்கள் கிழிப்பு...! தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டியடித்த போலீசார்


வாரிசு-துணிவு பேனர்கள் கிழிப்பு...! தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டியடித்த போலீசார்
x

சென்னையில் விஜய்-அஜித் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பு ரசிகர்களும் பேனர்களை கிழித்தெறிந்து சண்டையிட்டதால் பரபரப்பு நிலவியது.

சென்னை,

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படங்களுக்கு இன்று அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. குறிப்பாக துணிவு திரைப்படத்துக்கு அதிகாலை 1 மணிக்காட்சி திரையிடப்பட்டது. இதனால் இரவு முதலே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதேபோல் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்துக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இருதரப்பு ரசிகர்களிடையேயான மோதலை தவிர்ப்பதற்காகவே இவ்வாறு இரண்டு படங்களுக்கும் முதல் காட்சி வெவ்வேறு நேரத்தில் திரையிடப்பட்டது. அப்படி இருந்து இருதரப்பு ரசிகர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னையில் புகழ்பெற்ற திரையரங்குகளில் ரோகினி தியேட்டரும் ஒன்று. அங்கு வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களுமே திரையிடப்பட்டுள்ளன. அதிகாலை 1 மணிக்கு துணிவு படம் திரையிடப்பட்டபோது தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் அங்கிருந்த விஜய்யின் வாரிசு பட பேனர்களை கிழித்தெறிந்தனர்.

அதேபோல் 4 மணிக்கு வாரிசு படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் பதிலுக்கு அஜித் பேனரை கிழித்தெறிந்ததால் இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் இருதரப்பு ரசிகர்களும் அடிதடியில் இறங்கியதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி இருதரப்பு ரசிகர்களையும் விரட்டி அடித்தனர்.

1 More update

Next Story