'ரூட்' தலை பிரச்சினை: கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல் - ராயபுரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் அச்சம்
‘ரூட்’ தலை பிரச்சினையால் ராயபுரம் ரெயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
வேளச்சேரியிலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்யும் மாநில கல்லூரி மாணவர்கள் 'ரூட்' தலை பிரச்சினையில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரெயிலில் மாநில கல்லூரியில் படிக்கும் இருதரப்பை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த நிலையில்,திடீர் மோதலில் ஈடுபட்டனர். ரெயில் ராயபுரம் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்ற போது மாநிலக் கல்லூரி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ரெயிலில் இருந்து இறங்கி வீட்டிற்கு செல்லும் வேலையில், எதிர்தரப்பு மாணவர்களை நோக்கி கூச்சலிட்டனர்.
பின்னர், ரெயில் புறப்பட்ட நிலையில் திடீரென தண்டவாளத்தில் இருந்த கற்களை எடுத்து ரெயில் மீதும், ரெயிலில் நின்ற எதிர்தரப்பு மாணவர்கள் மீதும் சரமாரியாக வீசினர்.
இதில் ஆத்திரம் அடைந்த ரெயிலில் இருந்த மாணவர்கள் மின்சார அபாய சங்கிலியை திடீரென பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். பின்னர், கீழே இறங்கிய 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய எதிர்தரப்பினரை நோக்கி கற்களை வீசி தாக்கினர்.
இதனால் ரெயில் பயணிகள் அச்சமடைந்தனர். இது குறித்து அறிந்த ராயபுரம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்த நிலையில் மாணவர்கள் தப்பி ஓடினர். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மாநிலக் கல்லூரி மாணவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரெயில் சிறிது நேரம் கழித்து புறப்பட்டு சென்றது.