கோவை அனுவாவி சுப்பிரமணிய சாமி மலைக்கோவிலில் ரூ.13 கோடியில் ரோப் கார் சேவை - அமைச்சர் சேகர்பாபு தகவல்


கோவை அனுவாவி சுப்பிரமணிய சாமி மலைக்கோவிலில் ரூ.13 கோடியில் ரோப் கார் சேவை - அமைச்சர் சேகர்பாபு தகவல்
x
தினத்தந்தி 27 Aug 2023 10:08 AM GMT (Updated: 27 Aug 2023 12:00 PM GMT)

அனுவாவி மலைக்கோவிலில் 460 மீட்டர் தொலைவிற்கு ரோப் கார் வசதி அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கோவை,

கோவை மாவட்டம் பெரியதடாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற அனுவாவி சுப்பிரமணிய சாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ரோப் கார் சேவை அமைப்பது குறித்து தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார்.

தனது மனைவியுடன் வருகை தந்திருந்த அமைச்சர் சேகர்பாபு, சுப்பிரமணிய சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி முதியவர்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு கோவில்களில் ரோப் கார் மற்றும் தானியங்கி லிப்ட் வசதி செய்து தரப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அந்த வகையில் அனுவாவி மலைக்கோவிலில் 460 மீட்டர் தொலைவிற்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் ரோப் கார் வசதி அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே கரூர் அய்யர்மலை, சோளிங்கர் கோவில்களில் ரோப் கார் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், தொடர்ந்து திருக்கழுக்குன்றம், திருநீர்மலை உள்ளிட்ட கோவில்களில் ரோப் கார் வசதி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


Next Story