பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நாளை நிறுத்தம்
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நாளை நிறுத்தப்படுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகிய 2 பிரதான வழிகள் உள்ளன. மேலும் பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இதில், விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதாலும் பெரும்பாலான பக்தர்களின் முதல் தேர்வாக ரோப்கார் உள்ளது.
இந்தநிலையில் ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்புக்காக மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்போது அதன் சேவை நிறுத்தப்படும். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பழனி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம். இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.