நீலகிரியில் ரோப் கார்கள், பூங்காக்கள் அமைக்கப்படும்
இயற்கை மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் நீலகிரியில் ரோப் கார்கள், பூங்காக்கள் அமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் தெரிவித்தார்.
கூடலூர்
இயற்கை மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் நீலகிரியில் ரோப் கார்கள், பூங்காக்கள் அமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் தெரிவித்தார்.
ரோப் கார் வசதி
நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி என்பதால் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இதனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் நீலகிரியில் புதிய சுற்றுலா திட்டங்கள் தொடங்குவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஊட்டி தொட்டபெட்டா மற்றும் பைக்காரா பகுதியில் ரோப் கார் வசதி ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கேரளா-கர்நாடகா, தமிழக எல்லைகள் இணையும் கூடலூர், பொன்னூர் பகுதியில் பூங்காக்கள் மற்றும் ரோப் கார் அமைக்கும் திட்டங்கள் செயல்படுத்துவதற்கு சுற்றுலாத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த 2 மாதமாக ஆய்வு நடந்து வருகிறது.
முதன்மை செயலாளர் ஆய்வு
இந்தநிலையில் நேற்று தமிழக சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கலை பண்பாடு துறையின் முதன்மை செயலாளர் டாக்டர் மணிவாசன் ஊட்டி தொட்டபெட்டா, பைக்காரா பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கூடலூர் அருகே நாடுகாணி பொன்னூர் மலைப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் பூங்காக்களை அமைப்பது, ரோப் கார் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தோட்டக்கலை, வனத்துறை, வருவாய்த்துறையினர் உடனிருந்தனர். அதன் பின்னர் முதன்மை செயலாளர் நிருபர்களிடம் மணிவாசன் கூறியதாவது:-
இந்த பகுதிகளில் சுற்றுலா தலங்களை அதிகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. ரோப் கார்கள், பூங்காக்கள் அமைக்கப்படும். இதை செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக இயற்கை மற்றும் வனவிலங்குகளுக்கு எந்த ஒரு இடையூறு ஏற்படாமல் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.