நடைபாதையில் தடுப்புக்கம்பிக்கு பதிலாக கயிறு


நடைபாதையில் தடுப்புக்கம்பிக்கு பதிலாக கயிறு
x

தஞ்சை கல்லணைக்கால்வாய் நடைபாதையில் உள்ள தடுப்புக்கம்பிக்கு பதில் கயிறு கட்டிவைத்துள்ளனர். மழைநீர் வடிகால் மற்றும் பாலப்பணிகளுக்காக அகற்றப்பட்ட தடுப்புக்கம்பிகள் மீண்டும் சரி செய்யப்படவில்லை. மேலும் இது சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் தவறி விழும் நிலை உள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சை கல்லணைக்கால்வாய் நடைபாதையில் உள்ள தடுப்புக்கம்பிக்கு பதில் கயிறு கட்டிவைத்துள்ளனர். மழைநீர் வடிகால் மற்றும் பாலப்பணிகளுக்காக அகற்றப்பட்ட தடுப்புக்கம்பிகள் மீண்டும் சரி செய்யப்படவில்லை. மேலும் இது சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் தவறி விழும் நிலை உள்ளது.

கல்லணைக்கால்வாய் நடைபாதை

தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடைபெற்ற போது தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல சாலைகளில் நடைபாதை அமைக்கப்பட்டு அதில் இரும்பு தடுப்புக்கம்பிகளும் பொருத்தப்பட்டன. அந்த வகையில் தஞ்சை கல்லணைக்கால்வாயிலும் கரையை பலப்படுத்தி இருபுறத்திலும் நடைபாதை அமைக்கப்பட்டது.

தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள இர்வீன் பாலத்தில் இருந்து நாகை சாலையில் செல்லும் பாலம் வரை இந்த பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இர்வீன்பாலத்தில் இருந்து எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள பாலம் வரை மட்டுமே நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த நடைபாதையில் இருக்கைகள், தடுப்புக்கம்பிகள், மின்விளக்கு வசதிகளும் பொருத்தப்பட்டன.

தடும்புக்கம்பிக்கு பதில் கயிறு

2-வது கட்டமாக இர்வீன்பாலத்தில்இருந்து பெரியகோவில் அருகே உள்ள பாலம் வரை இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இர்வீன்பாலத்தில் இருந்து எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள பாலம் வரையிலான நடைபாதையில் இடதுகரையில் உள்ள நடைபாதை மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் இர்பாலம் இடிக்கப்பட்டு புதிதாக பாலம் கட்டப்பட்டது. மேலும் அருகில் உள்ள ராணி வாய்க்காலில் தண்ணீர் செல்லும் வகையிலும் சுரங்க வழிப்பாதை அமைக்கப்பட்டது. இந்த பணிகளுக்காக இர்வீன்பாலம் அருகே நடைபாதையில் இருந்த கம்பிகள் 100 அடி தூரம் அகற்றப்பட்டது. ஆனால் பாலப்பணிகள், மழைநீர்வடிகால் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இந்த இரும்பு தடுப்புகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. தற்போது இந்த பகுதியில் கயிறு கட்டி வைத்துள்ளனர்,

ஆற்றுக்குள் தவறி விழும் நிலை

மேலும் இந்த பாலம் பகுதி 2 சாலைகள் சந்திக்கும் இடமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தவறி ஆற்றுக்குள் விழும் நிலை உள்ளது. இதனால் அச்சத்துடனேயே வாகனம் ஓட்டி வருகிறார்கள். மேலும் நடை பயிற்சி மேற்கொண்டு வருபவர்களும் எச்சரிக்கையுடனே சென்று வருகிறார்கள்.வலது கரையில் உள்ள நடைபாதை பயன்பாட்டில் இல்லாத நிலையில், இடதுகரை பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் அதுவும் இந்த நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.மேலும் இந்த நடைபாதையில் உள்ள விநாயகர்கோவில் பின்பகுதியிலும் 50 அடி தூரத்துக்கு இரும்புதடுப்புக்கம்பி சரிந்து ஆற்றுக்குள் விழுந்த வண்ணம் உள்ளது. அதுவும் பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக நடைபாதையில் இரும்பு தடுப்புக்கம்பிகள் அமைக்க வேண்டும். ஏதாவது அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story