பராசக்தி மாரியம்மன் கோவிலில் கயிறு குத்து திருவிழா
ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவிலில் கயிறு குத்து திருவிழா இன்று நடக்கிறது.
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவிலில் கயிறு குத்து திருவிழா இன்று நடக்கிறது.
பராசக்தி மாரியம்மன்
சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று 8-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அம்மன் பழைய ஏழாயிரம்பண்ணை மண்டகபடியில் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை அணிந்த ஏராளமான பக்தர்கள் பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து புதுமை அம்மன் கோவில், வடக்கு தெரு, பொன்இருளப்பசாமி கோவில் வழியாக பராசக்தி மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்துச் சென்றனர்.
பாலாபிஷேகம்
பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தினர். இதில் ஏழாயிரம்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
9-வது நாள் திருவிழாவாக இன்று (திங்கட்கிழமை) அம்மன் ஏழாயிரம் பண்ணையில் உள்ள கயிறு குத்து மண்டகபடியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுகின்றனர். முத்து செலுத்துதல், அக்னி சட்டி செலுத்துதல், கயிறுகுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர். பொங்கல் வைபவ நிகழ்ச்சியை சென்னை முருகன் பெயிண்ட் கம்பெனி உரிமையாளர்கள் தொடங்கி வைக்கின்றனர். இரவு 8 மணி அளவில் நாடார் மகமை தொடக்கப்பள்ளி வளாகத்தில் சென்னை முருகன் பெயிண்ட் கம்பெனி சார்பில் சின்னத்திரை நடிகைகள் கலந்து கொள்ளும் பல்சுவை நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 3-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.