கோவையில் ரோஜா விலை உயர்வு
காதலர் தினத்தையொட்டி கோவையில் ரோஜா விலை உயர்ந்தது. ஒரு பூ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோவை
காதலர் தினத்தையொட்டி கோவையில் ரோஜா விலை உயர்ந்தது. ஒரு பூ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரோஜா பூக்கள்
உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலரும் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜா பூக்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட்டுகள் மற்றும் பரிசு பொருட்களை வாங்கி பிடித்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்வார்கள்.
இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட் போன்கள் மூலம் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக காதலர் தின வாழ்த்துகளை பரிமாறி கொண்டாலும், நேரில் சென்று ரோஜா பூக்கள், வாழ்த்து அட்டைகளை கொடுத்து வாழ்த்துவது தனித்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்களுக்கு மவுசு இருக்கும்.
நினைத்த நிறத்தில்...
இந்த நிலையில் கோவை பூ மார்க்கெட் மற்றும் காந்திபுரத்தில் உள்ள பூக்கடைகளுக்கு ஓசூரில் இருந்து கொண்டு வரப்பட்டு, பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்கள் கேட்கும் நிறங்களுக்கு ஏற்றவாறு, பூக்கள் மீது ஸ்பிரே அடித்து நிறத்தை மாற்றி விற்பனை செய்து வருகிறாா்கள். நினைத்த நிறத்தில் ரோஜா பூக்கள் கிடைப்பதால் போட்டிப்போட்டு வாங்கிச்செல்கிறார்கள்.
இதற்கிடையில் வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக ரோஜா பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.
மேலும் அதிகரிக்கும்
இதுகுறித்து பூ வியாரிகள் கூறியதாவது:-
ஓசூர் மற்றும் பெங்களூருவில் இருந்து கோவைக்கு ரோஜா பூக்கள், பூச்செண்டு தயாரிப்பதற்காக புளுடைசி பூக்கள், ஜர்புரா பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. வழக்கமாக ஓசூர் மற்றும் பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்படும் ஒரு ரோஜா பூவின் விலை ரூ.15 முதல் ரூ.20 வரை இருக்கும்.
தற்போது காதலர் தினத்தையொட்டி ஒரு ரோஜா பூவின் விலை ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் வரத்து குறைந்ததே காரணம் ஆகும். மேலும் 10 ரோஜா பூக்கள் கொண்ட ஒரு கொத்து ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.