மழை நீரில் நனைந்து அழுகும் சின்னவெங்காயம்


மழை நீரில் நனைந்து அழுகும் சின்னவெங்காயம்
x

தொண்டாமுத்தூரில் அறுவடை செய்த சின்னவெங்காயம் மழை நீரில் நனைந்து அழுகுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோயம்புத்தூர்

தொண்டாமுத்தூரில் அறுவடை செய்த சின்னவெங்காயம் மழை நீரில் நனைந்து அழுகுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

18 ஆயிரம் ஏக்கர்

கோவை தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சின்னவெங்காயம் பயிரிடப்படுகிறது. கடந்த முறை 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டு இருந்தது. விலைவீழ்ச்சி காரணமாக சின்னவெங்காயம் பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டினர்.

இதனால் இந்த முறை 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டும் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டு உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பள வில் சின்னவெங்காயம் சாகுபடி செய்ய ரூ.75 ஆயிரம் வரை செலவாகிறது.

தண்ணீர் புகுந்தது

தற்போது தொண்டாமுத்தூர் பகுதியில் சின்னவெங்காயம் அறுவடை நிலையை எட்டி உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக கோவை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக வெங்காயம் சாகுபடி செய்த நிலங்களில் தண்ணீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அறுவடை செய்த சின்னவெங்காயத்தை வெளியே எடுத்து வர முடியாத நிலை உள்ளது. இதனால் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் மழைநீரில் நனைந்தபடி நிலத்திலேயே கிடந்து அழுகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து சின்னவெங்காயம் பயிரிட்ட விவசாயி பெரியசாமி கூறியதாவது:-

நஷ்டஈடு வேண்டும்

சின்ன வெங்காயம் விலைவீழ்ச்சியால் முன்பு பாதிக்கப்பட் டோம். தற்போது கிலோ ரூ.25 வரை கொள்முதல் செய்யப்படு கிறது.

சின்னவெங்காயம் அறுவடை நிலையை எட்டி உள்ளது. மழை பெய்வதால் அறுவடை செய்யும் வெங்காயத்தை பட்டறைகளில் இருப்பு வைக்க முடியவில்லை. ஈரப்பதம் காரணமாக சின்னவெங்காயம் விரைவாக அழுக தொடங்குகிறது. செடியிலும் விட்டுவைக்க முடியாது.

அறுவடை செய்யாவிட்டால் அழுகிவிடும். வரப்புகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் அறுவடை செய்து சின்னவெங்காயத்தை வெளியே எடுத்து வந்து விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.

எனவே சின்ன வெங்காய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை அரசு நஷ்டஈடு வழங்கவேண்டும்.பட்டறைகளில் குறைந்த அளவு சின்னவெங்காயத்தைதான் இருப்பு வைக்க முடியும். எனவே சேமித்து வைக்க கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story