ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு வலைவீச்சு


ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு வலைவீச்சு
x

சென்னையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு முக்கிய அரசியல் புள்ளிகளை தேடி வருகிறார்கள். கொலையாளிகளுக்கு கார் ஓட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை,

சென்னை புளியந்தோப்பு நரசிம்மபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் (வயது 49). இவர் மீது 7 கொலை வழக்குகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஒரு காலத்தில் சென்னையை கலக்கி வந்த இவர், எதிரிகளின் தாக்குதலை தவிர்க்க சென்னையை காலி செய்துவிட்டு, வேலூர் மாவட்டம் போய் விட்டார்.

இருந்தாலும் இவரை போட்டுத்தள்ள எதிரிகள் காலம் பார்த்து காத்திருந்தனர். கடந்த 18-ந் தேதி அன்று ஆற்காடு சுரேஷ், ஒரு வழக்கு விசாரணைக்காக, சென்னை எழும்பூர் 10-வது கோர்ட்டில் ஆஜரானார். வழக்கமாக இதுபோல சென்னை வரும்போது, தனது கூட்டாளிகள் 10 பேர் புடை சூழ பயங்கர ஆயுதங்களுடன் அவர் வருவார். ஆனால் 18-ந் தேதி அன்று தனது கூட்டாளிகள் இல்லாமல் தனியாக வந்தார். எழும்பூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்தபிறகு, அன்றைய தினம் மாலை பட்டினபாக்கம் சென்றார். அங்கு பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றிற்கு சாப்பிட சென்றார். அவருடன் மாதவன் என்ற கூட்டாளி ஒருவர் மட்டும் சென்றார்.

இந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்த எதிராளிகள் காரில் பின்தொடர்ந்து வந்து ஆற்காடு சுரேசை வெட்டி சாய்த்து விட்டனர். அவருடன் வந்த மாதவனும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பட்டினபாக்கம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ரூ.2 கோடி நில பிரச்சினை தொடர்பாகவும், சிறையில் ஒன்றாக இருந்தபோது பகையாளியான ஜெயபால் (63), அவரது ஆட்கள் யமஹா மணி, சைதாப்பேட்டை சந்துரு ஆகியோர் முதலில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இவர்கள் வந்த காரை ஓட்டி வந்த மோகன் என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார். நெல்லையைச் சேர்ந்த ரவுடிகளான செந்தில்குமார், முத்துக்குமார் ஆகியோர் அங்குள்ள கோர்ட்டில், இந்த வழக்கு தொடர்பாக சரண் அடைந்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் இருவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவில், அந்த அரசியல் பிரமுகர்கள் இருவரும் இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story