விவசாயி கொலை வழக்கில் ரவுடி கைது
விவசாயி கொலை வழக்கில் ரவுடி கைது செய்யப்பட்டார்.
விவசாயியை கொன்ற வழக்கில் ரவுடி கைது செய்யப்பட்டார். தப்பி ஓடியதில் கீேழ விழுந்ததில் அவரது கை உடைந்தது.
வெட்டிக்கொலை
திருச்சி இ.பி.ரோடு கீழதேவதானம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளாதேவி. இவர் ஓயாமரி சுடுகாடு அருகே விளக்கு கடை வைத்துள்ளார். அதேபகுதியில் கடை நடத்தி வந்த வன்னியாயி தரப்புக்கும், மஞ்சுளாதேவி தரப்புக்கும் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இதில் மஞ்சுளாவின் கணவர் ராஜேந்திரன் தாக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரனின் மகன் ரவுடி அருண்பிரசாத் (வயது 34) வன்னியாயி கணவர் விவசாயியான தனபாலை (73) அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண்பிரசாத், மஞ்சுளா ஆகியோரை தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில் அவர்கள் ஓயாமரி சுடுகாடு அருகே பதுங்கி இருப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று மஞ்சுளாதேவியை கைது செய்தனர். ஆனால் போலீசாரை கண்டதும், அருண்பிரசாத் தப்பி ஓடினார். அப்போது ஓயாமரி சுடுகாடு அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையை தாண்டி குதித்து ஓட முயன்றபோது, அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது 'கை' உடைந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சென்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.