சென்னை புதுப்பேட்டையில் பயங்கரம் ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை
சென்னை புதுப்பேட்டையில் பழிக்குப்பழி வாங்க ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை ஆயிரம்விளக்கு, சுதந்திர நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச்சேர்ந்தவர் மோகன் என்ற மொக்கை மோகன் (வயது 27). ரவுடியான இவர் மீது ஆயிரம்விளக்கு, எழும்பூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, மோகன் புதுப்பேட்டையில் பிறந்த நாள் விழா ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் அங்கு தனது நண்பர்கள் சிலருடன் மது அருந்தினார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் மோகனை அரிவாளால் வெட்டுவதற்கு சுற்றி வளைத்தனர். மோகன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை ஓட, ஓட விரட்டிச்சென்று வெட்டினார்கள்.
படுகொலை
அரிவாளால் வெட்டப்பட்ட மோகன், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் அதே இடத்தில் துடி, துடித்து மோகன் பரிதாபமாக இறந்தார். வெறியாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் தப்பி ஓடிவிட்டனர். இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் கிடைத்தவுடன், கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் பிரபாகரன், துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் ரகுபதி ஆகியோர் மேற்பார்வையில், எழும்பூர் இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையில் போலீஸ் படையினர் விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட மோகனின் உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பழிக்குப்பழி வாங்க...
ரவுடி புறா வெங்கடேசன் என்பவருக்கும், மோகனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. புறா வெங்கடேசனை, மோகன் ஏற்கனவே தாக்கியதாகவும் தெரிகிறது. அதற்கு, பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்துடன், புறா வெங்கடேசனின் கூட்டாளிகள் விக்ரம் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து, மோகனை தீர்த்துக்கட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் 4 பேரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டையை சேர்ந்த விக்ரம்(20), விக்னேஷ்(21), அவருடைய சகோதரர் வெங்கடேஷ்(20), வசீகரன்(20) ஆகிய 4 பேரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பட்டாகத்தி, மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் ெதரிவித்தனர்.