கோவை தொழில் அதிபரிடம் ரூ.1¼ கோடி மோசடி
கோவை தொழில் அதிபரிடம் ரூ.1¼ கோடி மோசடி
கோவை,
துருக்கி நாட்டில் இருந்து ஆப்பிள் வாங்கி அனுப்புவதாக கூறி கோவை தொழில் அதிபரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்த சென்னை பல் டாக்டர் கைதுசெய்யப்பட்டார். விசாரணையில், அவர் மோசடி பணத்தில் சினிமா தயாரித்தது தொியவந்தது.
இந்த சம்பவம் குறித்து குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழில் அதிபர்
கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). தொழில் அதிபரான இவர் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவர் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருவதை ஆன்லைன் மூலமாக சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பல் டாக்டர் தம்பதியான அரவிந்தன் (35), அவருடைய மனைவி துர்கா பிரியா (33) ஆகியோர் அறிந்து கொள்கிறாா்கள். பின்னர் அவர்கள் தொழில் அதிபர் ரமேசை செல்போனில் தொடர்பு கொண்டனர்.
அப்போது அவர்கள் தங்களை பல் மருத்துவர்கள் என்றும், சென்னை கோடம்பாக்கத்தில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் கூறி அறிமுகம் செய்து கொண்டனர்.
அத்துடன் தற்போது துருக்கி நாட்டில் இருந்து ஆப்பிள் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவதாகவும், அதில் நல்ல லாபம் கிடைக்கிறது என்றும் கூறியதாக தொிகிறது. நீங்கள் எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஆப்பிள் இறக்குமதி செய்து தருவதாகவும், இதன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் தற்போது துருக்கி நாட்டில் இருந்து ஒரு கன்டெய்னரில் ஆப்பிள் வருவதாகவும் நீங்கள் ரூ.1 கோடியே 24 லட்சத்து 60 ஆயிரம் செலுத்தினால் ரூ.2 கோடியாக லாபம் சம்பாதிக்கலாம் என கூறினர்.
ரூ.1¼ கோடி மோசடி
இதனை உண்மை என நம்பிய ரமேஷ் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாத காலக்கட்டத்தில் ரூ.1 கோடியே 24 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார். ஆனால் பணம் அனுப்பி நீண்ட நாட்கள் ஆகியும் அவர்கள் கூறியபடி ஆப்பிள் வந்து சேரவில்லை. இது குறித்து ரமேஷ் கேட்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவர் சென்னைக்கு சென்று கணவன்-மனைவி இருவரையும் நேரில் சந்தித்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டார்.
பல் டாக்டர் கைது
ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்து விட்டனர். மேலும் தங்களை மிரட்டுவதாக ரமேஷ் மீது டாக்டர் தம்பதியினர் சென்னை போலீசில் புகார் அளித்ததாகவும் தெரிகிறது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழில் அதிபர் ரமேஷ் இந்த மோசடி குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவில் பல் டாக்டர் தம்பதிகளான அரவிந்தன், துர்கா பிரியா ஆகியோர் மீது புகார் அளித்தார்
. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் சுகாஷினி அறிவுறுத்தலின்படி உதவி கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி விசாரணை நடத்தினார்.
இதையடுத்து அரவிந்தன், துர்கா பிரியா ஆகியோர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ரமேஷிடம் துருக்கி நாட்டில் இருந்து ஆப்பிள் பழங்களை அனுப்புவதாக கூறி ரூ.1 கோடியே 24 லட்சத்து 60 ஆயிரத்தை மோசடி செய்த பல் டாக்டர் அரவிந்தனை சென்னையில் வைத்து போலீசார் நேற்று கைது செய்தனர்.
சினிமா தயாரிக்க முயற்சி
பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மோசடி பணத்தில் சினிமான தயாரிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதற்காக அவர் சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி உள்ளதும், அதன்மூலம் பல்வேறு முன்னணி சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதும் தெரியவந்தது.
இதைக்காட்டி அவர் யாரிடமெல்லாம் மோசடியில் ஈடுபட்டு உள்ளார் என்பது குறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் தலைமறைவாக உள்ள அரவிந்தனின் மனைவியான துர்கா பிரியாவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.